Page Loader
சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி
சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் விஜயலட்சுமி

சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி

எழுதியவர் Nivetha P
Feb 16, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை சொல்லித்தரும் பள்ளி ஒன்றினை நடத்திவருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்று இலவசமாக 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தற்காப்பு கலையினை கற்றுக்கொடுத்துள்ளார். 42 வயதில் குடும்பத்தினை ஒருபுறம் கவனித்துக்கொண்டு, மறுபுறம் தான் கற்ற தற்காப்பு கலையினை பெண்களுக்கு கடந்த 5 வருடங்களாக இவர் கற்றுக்கொடுத்து வருவது பாராட்டத்தக்கது என்று கூறப்படுகிறது. இவரிடம் தற்காப்புக்கலை பயிலும் மாணவிகளுக்கு இவர் இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். முதலாவதாக, யாரேனும் உங்கள் அனுமதியின்றி உங்கள் உடலில் கைவைத்தால் முதலில் அங்கிருந்தவாறே கத்துங்கள், அருகில் இருப்போரிடம் உதவி கோருங்கள். இரண்டாவது விஷயம் உங்கள் அனுமதியின்றி யாரேனும் தொட்டால் அடித்துவிடுங்கள். பிரச்சனை வருமோ என்று பயப்படவேண்டாம் என்று கூறுகிறார்.

ஆர்வமுடன் பயிலும் மாணவிகள்

மாணவிகளுக்கு தற்காப்பு கலையின் அவசியத்தை எடுத்துரைத்த விஜயலட்சமி

அவ்வாறு அடித்துவிட்டு பயப்படாமல் தனக்கு தகவல் அளிக்குமாறும் இவர் கூறுகிறார். அதன்படி பல மாணவிகள் அடித்துவிட்டு இவருக்கு போன்செய்து தகவலளித்துள்ளார்களாம். அவர்களுக்கு இவர் சட்டரீதியாகவும் உதவியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இவர் தனது கூடுதல் கவனத்தை செலுத்தி பயிற்றுவிக்கிறார். இதுகுறித்து விஜயலட்சுமி பேசுகையில், நான் முதலில் இந்த தற்காப்புகலை பயிற்சியை துவங்கும்போது, பலரும் பல கேள்விகளை கேட்டதோடு, ஆண்களுக்குத்தானே தற்காப்புகலை என்றும் கூறினார்கள். அவர்களிடம் மாணவிகளுக்கு தற்காப்புகலை என்பது மிகவும் அவசியம் என எடுத்துரைத்தேன். அதன்பின்னரே பலர் என்னிடம் தற்காப்புகலை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்று கூறினார். மேலும் இவரின் அப்பா மற்றும் தாத்தாக்கள் ஆகியோர் சுதந்திர போராட்டவீரர்கள் என்றும், அதனால் இந்த ஆர்வம் தனக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.