சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதோடு, மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டும் வருகிறது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் இடைஇடையே சட்டவிரோதமாக கழிவுநீர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மழை காலங்களில் மழைநீர் செல்ல தடைபட்டு தேங்கி நிற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
2 வாரங்களில் ரூ.5,09,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
மேற்கூறியவாறு குறிப்பிட்ட அந்த 2வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் 5,09,500ரூபாய் அபராதத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, வடிகால்கள் பொதுவாக 7மீட்டர் மற்றும் அதற்குமேல் அகலம் கொண்ட சாலைகளில் மட்டுமே அமைக்கப்படுகின்றன. வடிகாலின் அளவு நீர்ப்பிடிப்புபகுதி, நிலத்தின் அமைப்பு மற்றும் வெளியேறும் நீரின் அளவு முதலியன பொறுத்து அமைக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சாலையின் அகலம் எப்படி இருந்தாலும் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழைநீர்வடிகால்கள் வடிவமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.