வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 8-ஆம் தேதி வரை லேசான மழை தொடரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர் மற்றும் வங்கதேச கடலோர பகுதியை நோக்கிச் செல்லும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதென கணிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல்
அரபிக்கடல் தாழ்வு மண்டலம் வலுவிழப்பு
மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது மேலும் வலுவிழக்கக்கூடும். அதோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 8-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை தொடர வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று (திங்கள்) மற்றும் நாளை (செவ்வாய்) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.