சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் பணியிடை நீக்கம்
மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின்குமார் ஜெயின்(31)என்பவர் சென்னை ஐஐடி'யில் தனது பி.ஹெச்.டி.படிப்பினை படித்து வந்துள்ளார். ஆராய்ச்சி பிரிவில் பயின்றுவந்த இவர் கடந்த மார்ச் 31ம்.,தேதி ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழும் நிலையில், மாணவர் சச்சின்குமார் ஜெயினின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, இவரின் மரணத்திற்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என்று குற்றம்சாட்டிய சகமாணவர்கள், அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அதன்படி, ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில், 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மனவுளைச்சல் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
இந்த குழுவில் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோரும் இருந்தனர். இந்த விசாரணை குழுவானது ஐஐடி மாணவர்கள், பெற்றோர்கள், இதர பேராசிரியர்கள் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை செய்தது. இதனையடுத்து, அனைத்து தரப்பு விசாரணைகளையும் செய்து முடித்த ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி திலகவதி தலைமையிலான குழு 700 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையினை கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஐடி இயக்குனர் வீ.காமகோடியிடன் சமர்பித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது பேராசிரியர் ஆசிஷ் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணையில் மாணவர் சச்சின் குமார் ஜெயினை அவமானப்படுத்தும் வகையில் அனைத்து மாணவர்கள் மத்தியில் பேராசிரியர் ஆசிஷ் சென் பேசியதால் அவர் மனவுளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.