"மாதம் ரூ.1.30 லட்சம் உதவித்தொகை!" PhD முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் அரிய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முனைவர் பட்டம் (PhD) முடித்த திறமையான ஆராய்ச்சியாளர்களுக்காக இன்ஸ்டிடியூட் போஸ்ட்-டாக்டோரல் ஃபெலோஷிப் (IPDF) என்ற உயர்மட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது கல்வி இலக்குகளை விரிவுபடுத்தி ஆசிரியர் பணி சார்ந்த நிலையை எட்ட இத்திட்டம் பெரும் பாலமாக அமையும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் விண்ணப்பிக்கும் வகையில் அமைந்த இந்த ஆராய்ச்சி வாய்ப்பிற்கு உரிய வழிகாட்டுதல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்
தகுதிகள் மற்றும் வயது வரம்பு
பிஎச்டி (PhD) முடித்து 5 ஆண்டுகளுக்குள் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சேரும் நாளில் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மேலும், முதன்மைக் கட்டுரையாளராக உலகத் தரம் வாய்ந்த குறைந்தது இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்க வேண்டும்.
ஆய்வறிக்கையை சமர்ப்பித்த மாணவர்களும் நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம்
பேராசிரியரின் ஒப்புதலும் விண்ணப்பிக்கும் முறையும்
விண்ணப்பதாரர்கள் தனிச்சையாக விண்ணப்பிக்க முடியாது.
சென்னை ஐஐடியில் பணியாற்றும் ஒரு பேராசிரியரை வழிகாட்டியாகத் தேர்வு செய்ய வேண்டும்.
அவருடன் தனது புதிய ஆராய்ச்சித் திட்டத்தைப் பற்றி விவாதித்து சம்மதம் பெற வேண்டும்.
ஆராய்ச்சித் திட்டம் புதுமையாகவும், பிஎச்டி ஆய்வின் தொடர்ச்சியாக இல்லாமல் புதியதாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை 25 எம்பி அளவுகோலுக்குள் மின்னஞ்சல் மூலம் அந்தப் பேராசிரியருக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை
மாதம் ரூ.1.30 லட்சம் உதவித்தொகை மற்றும் பலன்கள்
இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் ரூ.1,30,000 ஒருங்கிணைந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் நிறுவனப் பங்களிப்பாக ரூ.70,000மும், பேராசிரியரின் திட்ட நிதியிலிருந்து ரூ.60,000மும் உள்ளடங்கும்.
மேலும் ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை ஆராய்ச்சி மற்றும் பயண செலவுகளுக்கான நிதியும் வழங்கப்படும்.
ஆரம்பத்தில் 1 ஆண்டாக இருக்கும் பணிக்காலம் செயல்பாடுகளின் அடிப்படையில் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.