'அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஆராய விரும்புபவன் நான்': இஸ்ரோ தலைவர் சோமநாத்
விஞ்ஞானிகள் கோவில்களுக்குச் செல்வது குறித்து 'அறிவியலா மதமா' என்ற விவாதம் இணையத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் தான் ஆராய விரும்புவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) தலைவரான சோமநாத், சந்திரயான்-3 திட்டத்தின் நாயகன் ஆவார். கடந்த புதன்கிழமை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு நன்றி செலுத்த கோவிலுக்கு சென்ற இஸ்ரோ தலைவர்
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு, பத்ரகாளி கோயிலுக்கு நேற்று சென்றார். சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு நன்றி செலுத்துவதற்காக அவர் அந்த கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரது இந்த ஆன்மீக பயணத்தின் செய்திகள் இணையத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று பேட்டி அளித்த அவர், "நான் ஆராய்பவன். நான் சந்திரனையும் ஆராய்கிறேன். என் உள்ளொளியையும் ஆராய்கிறேன். அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இதுவாகும். நான் பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். பல நூல்களைப் படித்திருக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.