சொகுசு வாழ்க்கை டூ ஆட்டோ ரிக்ஷா! பெங்களூரு ஐடி ஊழியரின் அதிரடி மாற்றம்!
செய்தி முன்னோட்டம்
உயர் பதவி, கைநிறையச் சம்பளம், சொகுசான ஏசி அறையெனப் பலரும் கனவு காணும் கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, இன்று பெங்களூரு வீதிகளில் மின்சார ஆட்டோ (Electric Auto) ஓட்டி வரும் ராகேஷ் என்பவரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் பொருளாதார வெற்றியைத் தேடி ஓடிய வாழ்க்கையில் அமைதி இல்லாததால், அவர் மேற்கொண்ட இந்த மாற்றம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ராகேஷ், தனது மன அமைதிக்காகத் தனது பாதையை மாற்றிக்கொண்டார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
கார்ப்பரேட் உலகின் மறுபக்கம்
தொடக்கத்தில் எல்லாம் நன்றாக இருப்பது போலத் தெரிந்தாலும், மெல்ல மெல்ல நான் மற்றவர்களைத் திருப்திப்படுத்தவே உழைக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.என்னையே நான் மறந்துவிட்டேன், என ராகேஷ் உருக்கத்துடன் கூறுகிறார். கார்ப்பரேட் உலகில் மனிதர்கள் வெறும் முடிவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாகப் பதிந்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தந்தையுடனான கசப்பான உறவு ஆகியவை அவரைத் தற்கொலை எண்ணம்வரை கொண்டு சென்றன. நீண்ட காலம் மன அழுத்தத்திற்கான மருந்துகளையும் அவர் உட்கொள்ள வேண்டியிருந்தது.
மாற்றத்திற்கான படிகள்
மீண்டெழுந்த ராகேஷ்
தனது வாழ்வை மாற்றத் தீர்மானித்த ராகேஷ், உளவியல் (Psychology) பயின்று மனித நடத்தைகளைப் புரிந்து கொண்டார். உடல் நலத்தில் அக்கறை காட்டி 15 கிலோ எடையைக் குறைத்ததுடன், முவே தாய் (Muay Thai) மற்றும் ஜூ-ஜிட்சு (Ju-Jitsu) போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார். எவ்விதத் தயக்கமுமின்றி உணவு விநியோகம் (Food Delivery), பைக் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் ஜிம் உதவியாளராகத் தரை துடைக்கும் வேலைகளைச் செய்து தனது சுயமரியாதையை மீட்டெடுத்தார்.
அடையாளம் தேடிய பயணம்
ஆட்டோ ஓட்டுநராக மாற்றம்
கார்ப்பரேட் பதவிகளை உதறித் தள்ளியபிறகு, ராகேஷ் எவ்விதத் தயக்கமுமின்றி சாதாரண வேலைகளைச் செய்யத் தொடங்கினார். உணவு விநியோகம் (Food Delivery), பைக் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் உதவியாளர் எனப் பல பணிகளைச் செய்தார். இன்று பெங்களூர் வீதிகளில் மின்சார ஆட்டோ ஓட்டி வரும் ராகேஷ், தனது ஓய்வு நேரத்தில் நடனம் மற்றும் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். உண்மையான மகிழ்ச்சி என்பது சம்பளத்திலோ அல்லது அந்தஸ்திலோ இல்லை; நம்மை நாமே கண்டறிந்து, நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்வதில்தான் உள்ளது, என ராகேஷ் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். இவரது இந்தப் பயணம், மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் பல இளைஞர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.