சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்ட வேலையின் பொழுது, தோட்டத்தின் நடுவில் கல்லினால் ஆன சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுகற்கள் மற்றும் நந்தி சிலைகள் புதைந்து கிடப்பதை கவனித்த முனுசாமி, கோவையை சேர்ந்த அரண் பணி அறக்கட்டளைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து விவசாய நிலத்திற்கு விரைந்து வந்த அறக்கட்டளை குழுவினர் கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுக்கற்களை வெளியே எடுத்தனர். இதனையடுத்து அங்கிருந்த மரத்தடியில் பீடம் அமைத்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க சிலையை வைத்து பூஜை செய்து வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோவை அரண் பணி அறக்கட்டளை குழுவினர் தகவல்
இது குறித்து கோவை அரண் பணி அறைக்கட்டளை குழுவினர் கூறுகையில், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆதார பீடம் கொண்டு மூன்றடி உயரம் இரண்டடி விட்டம் கொண்டுள்ளது. சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதற்கு அருகிலேயே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கற்கள் காணப்பட்டது, அதன் அருகில் மூன்று நந்தி சிலைகளும், 2 புலிக்குத்தி நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதி அருகேயுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்னரே புலிகள் நடமாட்டம் இருந்திருக்கக்கூடும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளை சண்டையிட்டு வீரர்கள் இறந்ததால் அதன் நினைவாக இவ்வாறு புலி குத்தி நடுகற்கள் நடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் தற்போது அந்த பகுதி முழுவதும் தோண்டி எடுக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.