டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(டிச.,1)காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு பகுதி நோக்கி நகர்ந்து நாளை(டிச.,2)ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இது வரும் 3ம் தேதி புயலாக மாறும் என்று தெரிகிறது.
அதன்பின், டிச.,4ம் தேதி மாலை சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்து வரும் 4 நாட்கள் வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மழை
இன்றும், நாளையும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை
அதன்படி, இன்றும், நாளையும்(டிச.,2) தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், டிச.,3ம் தேதி சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் துவங்கி கடலூர் வரையில் ஒருசில இடங்களில் வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும்,
பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும்,
திருவள்ளூர் பகுதியில் அதி கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.