தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை
தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல கிராமங்கள் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலமும் படகுகள் மூலமும் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய வானிலை அறிக்கை படி, மேகவெடிப்பு காரணமாக பெய்த இந்த கனமழையால் முலுகு மற்றும் பூபாலப்பள்ளி மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதே போல் ஹைதராபாத், வாரங்கல் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகளுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்த பிரதமர்
தெலுங்கானாவில் தற்போது வரலாறு காணாத பேய் மழை கொட்டி தீர்த்ததில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி நீரில் அடித்து செல்லப்பட்டவர்களுள் இதுவரை 9 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தற்போது மழை பெரும்பாலான இடங்களில் நின்ற நிலையிலும் வெள்ளம் வடியாமல் உள்ளதால், ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு வழங்கி வருகிறது. இதற்கிடையே மீட்பு பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று(ஜூலை.,29) கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.