தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: 7 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
செய்தி முன்னோட்டம்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று (நவம்பர் 17) ஏழு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்காக அந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோர ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வானிலை அறிக்கை
மற்ற மாவட்டங்களுக்கான மழை வாய்ப்பு
கடலோர மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.