வாக்கு எண்ணிக்கை நாளில் கனமழை! மே 4-ல் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்படும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு
வாக்கு எண்ணிக்கை நாள் (மே 4) மழை நிலவரம்
மே 4-ஆம் தேதி தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பல இடங்களில் பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பாதை
வாராந்திர மழை முன்னறிவிப்பு
மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுபாதை நிலவுகிறது. இது கிழக்கு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாகச் செல்வதால் தமிழகத்தில் மழைக்குசாதகமான சூழல் நிலவுகிறது. மே 5 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல்லில் கனமழை பொழியலாம் என்றும். மே 6 ஆம் தேதி தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும். மே 7 மற்றும் 8 ஆம் தேதி மழைப் பொழிவு மேலும் அதிகரித்து, தென்தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை
சென்னை நிலவரம்
மே 4 முதல் 6-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும். எனினும், அதற்கு முன் கடலோரப் பகுதிகளில் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
வாக்கு எண்ணிக்கை
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மே 4-ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.