கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
கேரளாவின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இடுக்கி, காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எர்ணாகுளம், கண்ணூர், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் நேற்று ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்துள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என காசர்கோடு ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில், பத்தனமத்திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அனைத்து தாலுகாக்களிலும் அவசர சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன
எனவே, நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் மாவட்ட பள்ளிகள் மூடப்பட்டது. நிலைமையை சமாளிக்க, வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இது குறித்து தனது முகநூல் பதிவில் பேசி இருந்த அமைச்சர் கே.ராஜன், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஆனால், பீதி அடையத் தேவையில்லை என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். வருவாய்த் துறையும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் துல்லியமான தகவல்களை அளித்து வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த உயர்மட்ட கூட்டத்தை அடுத்து, அனைத்து தாலுகாக்களிலும் அவசர சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.