தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் சற்றே தாமதமாக தொடங்கிய பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 36 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
நேற்று இரவு முதல், தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.