தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், என்ஜின்கள் மற்றும் அதற்கு தேவையான அமைப்புகள் 2027 இல் இருந்து தொடங்கி 2032 க்குள் முழுவதுமாக HAL க்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த என்ஜின்கள், இந்திய விமானப் படைக்காகக் கொள்முதல் செய்யப்படும் 97 இலகுரக போர் விமானம் (LCA) Mk1A திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும்.
தேஜஸ் Mk1A
தேஜஸ் Mk1A விமானங்களின் முக்கியத்துவம்
அண்டை நாடான சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ பலம் மற்றும் பாகிஸ்தானுக்கு அது அளிக்கும் ஆதரவு ஆகியவற்றுக்கு மத்தியில், இந்திய விமானப் படையின் குறைந்து வரும் படைப்பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு தேஜஸ் Mk1A விமானங்கள் மிகவும் முக்கியமானவையாகும். கடந்த செப்டம்பரில், இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் Mk1A போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக HAL நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ₹62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வான் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் போன்ற பலதரப்பட்ட பணிகளைச் செய்வதற்கு பய்னபடுத்தப்படும் போர் விமானமான Mk1A, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்பில் ஒரு பெரிய பாய்ச்சலைக் குறிக்கிறது.