41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கனேடிய தூதர்களை இந்திய அரசாங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற்றியது குறித்து இன்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனேடிய அதிகாரிகள் இந்திய விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்த கவலைகள்" இருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான பிரச்சனையால் கனட-இந்திய உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இந்தியாவில் பணிபுரிந்து வந்த 41 கனேடிய தூதர்களை இந்தியா சமீபத்தில் வெளியேற்றியது. இது கனடாவுடனான இந்திய உறவுகளை மேலும் சிக்கலாகியது. இந்நிலையில், இது குறித்து முதல் முறையாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து பேசியதாவது:
வியன்னா உடன்படிக்கையால் தான் சமநிலை பின்பற்றப்படுகிறது. அது சர்வதேச விதியாகும். ஆனால் இந்த விஷயத்தில், கனேடிய அதிகாரிகள் நமது விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து எங்களுக்கு கவலைகள் இருந்ததால், நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம். கனேடிய அதிகாரிகள் தலையிடுவது குறித்த பெரும்பாலான தகவல்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். அவர்களில் பலரிடம் நாங்கள் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். இந்திய தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது வியன்னா உடன்படிக்கையின் மிக அடிப்படையான அம்சமாகும். ஆனால், இப்போது கனடாவில் நமது மக்கள் பாதுகாப்பாக இல்லை. நமது தூதர்களின் பாதுகாப்பிற்கு சவால் விடப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.