LOADING...
ஓடும்போதே ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை! பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை

ஓடும்போதே ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை! பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2026
01:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்சாக்களை மொபைல் ஆப் மூலமாக தூரத்திலிருந்தே அணைத்து முடக்கும் அதிர்ச்சி தரும் புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஓடும் வண்டியை புளூடூத் தொழில்நுட்பம் மூலம் திடீரென ஆஃப் செய்து பிராங்க் செய்வதாகக் கூறி, பயணிகளின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த செயல்கள் அரங்கேற்றப்பட்டன. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு, இதற்கு பயன்படுத்தப்பட்ட மூன்று முக்கியப் பேட்டரி செயலிகளை அதிரடியாக தடை செய்து ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கியுள்ளது.

சீனா

தடை செய்யப்பட்டுள்ள 3 சீனப் பேட்டரி செயலிகள்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஈ-ரிக்சாக்களை ரிமோட் மூலம் முடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட BAT-BMS, Lossigy மற்றும் Epoch i-ion ஆகிய மூன்று பேட்டரி மேனேஜ்மென்ட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இந்தத் தடையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது போன்ற தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் வேறு எந்த மொபைல் செயலிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றின் மீதும் உடனடித் தடை விதிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

வைரல் வீடியோ

தொழில்நுட்பக் கோளாறும் வைரலான பிராங்க் வீடியோக்களும்

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான குறைந்த விலை ஈ-ரிக்சாக்களில் சீனத் தயாரிப்பு லித்தியம்-அயன் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சீன சிஸ்டம்கள் பெரும்பாலும் எந்தவிதமான பாஸ்வேர்ட் பாதுகாப்பும் இல்லாமலோ அல்லது நிறுவனத்தின் பொதுவான பழைய பாஸ்வேர்டுடனோதான் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில குறும்புக்காரர்கள், வண்டியின் 10 முதல் 15 மீட்டர் புளூடூத் எல்லைக்குள் நின்றுகொண்டு, தங்களின் மொபைலில் உள்ள 'BAT-BMS' ஆப் மூலம் வண்டியின் பேட்டரியை ஆஃப் செய்து விளையாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது.

Advertisement

மத்தய அரசு உத்தரவு

ஆப் ஸ்டோர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

இந்திய சைபர் பாதுகாப்பு மாநாட்டின் இடையே இது குறித்துப் பேசிய ஐடி துறை செயலாளர் கிருஷ்ணன், இதுபோன்ற ஆபத்தான செயலிகள் குறித்துத் தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அவை ஆப் ஸ்டோர்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற தளங்கள் தங்களது தளத்தில் அப்லோட் செய்யப்படும் செயலிகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பயனர்களுக்கு அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் எந்த ஒரு செயலியையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அரசு தரப்பில் உறுதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement