தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை
வரலாறு காணாத வகையில் இந்தியாவில் தக்காளியின் விலை கடந்த ஜூலை 27ம் தேதி ரூ.100-க் கடந்து விற்பனையாகி வருகிறது. அதிகரிக்கும் தேவை, வெப்பச்சலனம் மற்றும் பயிர்ச் சேதம் ஆகிய காரணங்களால் சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்து, விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்த சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டொமேட்டோ கிராண்டு சேலஞ்ச் (Tomato Grand Challenge) என்ற போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது மத்திய நுகர்வோர் நலத்துறை. நுகர்வோருக்கு குறைவான விலையில் தக்காளி கிடைக்கவும், விவாசாயிகளுக்கு விளைவித்த தக்காளிக்கு சரியான மதிப்பை அளிக்கவும், தக்காளி மதிப்புச் சங்கிலியில் புதுமையான யோசனையை புகுத்த, கல்வித் துறையுடன் சேர்ந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கிறது மத்திய நுகர்வோர் நலத்துறை.
டொமேட்டோ கிராண்டு சேலஞ்ச்:
மத்திய நுகர்வோர் நலத்துறையின் செயலாளர் ரோகித் குமார் சிங் இந்த முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். தக்காளியை பயிரிடுதல் தொடங்கி சந்தைப்படுத்ததுதல் வரை, அதன் மதிப்புச் சங்கிலியில் அனைவரும் பயன்பெறும் வகையில் வரவேற்கதக்க புதிய மாற்றங்கள் குறித்த திட்டங்களை அளிக்க வேண்டும். வெற்றி பெறும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சொழில்நுறையில் பணிபுரிபவர்கள், இந்திய ஸ்டார்ட்அப்கள், MSME-க்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என யார் வேண்டுமானாலும் மத்திய நுகர்வோர் நலத்துறையின் இந்த முன்னெடுப்பில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்புபவர்கள், நுகர்வோர் நலத்துறையின் இந்த இணையப்பக்கத்திற்குச் (doca.gov.in/gtc/index.php) சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.