பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் ராமநாதப்புரம் சென்றடைந்தார். ராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர், காலையில் மண்டபம் கேந்திர வித்தியாலயா பள்ளிக்கு சென்று மாணவர்களோடு கலந்துரையாடினார். பின்னர் மாலை தேவிப்பட்டின மீனவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து எட்டிவயல் பகுதிக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்கள நாதர், மங்கள நாயகி, மரகத நடராஜர், இலந்தை மரம் ஆலயம் ஆகிய இடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி-சட்டை சகிதமாக சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்பு
இந்த கோயிலானது உலகிலேயே முதன்முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட, 8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் காய்த்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்புக்கொண்ட இந்த கோயிலுக்கு வந்த ஆளுநர் கோயிலுக்கு வந்த ஆன்மீக பக்தர்களை நேரடியாக சந்தித்து அவர்களது ஆசியினை பெற்றார். இதற்கு முன்னதாக இக்கோயில் தேவஸ்தானம் சார்பில், நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தலைமையில் குருக்கல்கள் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும், மாலை கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும் சென்று ஆளுநர் அஞ்சலி செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.