LOADING...
கோவா முன்னாள் முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சராக இருந்த ரவி நாயக் காலமானார்
ரவி நாயக் இரண்டு முறை கோவாவின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்

கோவா முன்னாள் முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சராக இருந்த ரவி நாயக் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2025
09:35 am

செய்தி முன்னோட்டம்

கோவா மாநில வேளாண் துறை அமைச்சராகவும், மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த மூத்த அரசியல் தலைவர் ரவி நாயக், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரில் ரவி நாயக் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, போண்டா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அதிகாலை 1 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் போண்டாவில் உள்ள கட்பபந்தில் உள்ள இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி

தலைவர்கள் அஞ்சலி

ரவி நாயக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது X பதிவில், "கோவாவின் வளர்ச்சிப் பாதையை வளப்படுத்திய அனுபவம் வாய்ந்த நிர்வாகியாகவும், அர்ப்பணிப்புள்ள பொது ஊழியராகவும் ரவி நாயக் எப்போதும் நினைவுகூரப்படுவார். குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்," என்று அஞ்சலி செலுத்தினார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்,"கோவா அரசியலின் ஒரு முக்கியப் பிரமுகர், பல தசாப்தங்களாகப் பணியாற்றியவர். அவரது தலைமை, பணிவு மற்றும் பொது நலனுக்கான பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்," என்று இரங்கல் தெரிவித்தார்.

விவரங்கள்

யார் இந்த ரவி நாயக்?

ரவி நாயக், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (MGP), காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் பயணித்து ஏழு முறை MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இரண்டு முறை கோவாவின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். முதல்முறை ஜனவரி 1991 முதல் மே 1993 வரை முற்போக்கு ஜனநாயக முன்னணியின் கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கினார். 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 8 வரை ஆறு நாட்கள் மட்டுமே பதவியில் இருந்து, கோவாவின் மிகக் குறுகிய காலம் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெயரையும் பெற்றார். 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக வடக்கு கோவாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் 2022ல் பாஜகவில் இணைந்து, வேளாண் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.