Loading...
43 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி: "கோயில் அருகிலாவது விட்டு செல்லுங்கள்" என தாய் உருக்கமான கோரிக்கை
செஞ்சி அருகே மாயமான சிறுமியை கோயிலருகே விட்டுச்செல்லுமாறு தாய் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

43 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி: "கோயில் அருகிலாவது விட்டு செல்லுங்கள்" என தாய் உருக்கமான கோரிக்கை

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அப்பகுதி அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி மாயமாகி இன்றுடன் 43 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சத்தியமங்கலம் போலீசாரை தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீசார் ரேணு, மஞ்சுளா மற்றும் உறவினர்கள் உட்படப் பலரிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் கண்ணீர்

"யாராவது அழைத்து சென்றிருந்தால் கோயில் அல்லது குளத்தின் அருகே விட்டுவிடுங்கள்"

மகளைப் பிரிந்து 43 நாட்களாக உணவும் உறக்கமுமின்றித் தவித்து வரும் தாய் பவானி கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், "யாராவது என் மகளை அழைத்துச் சென்றிருந்தாலும், தயவுசெய்து அவளை ஏதாவது ஒரு கோயில் அல்லது குளத்தின் அருகிலாவது கொண்டு வந்து விட்டுச் செல்லுங்கள். யார் அழைத்துச் சென்றார்கள், எப்படிச் சென்றாள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை".

"இதில் நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல மாட்டோம், எங்களுக்கு எங்கள் மகள் உயிருடன் திரும்பக் கிடைத்தால் போதும்; கடவுள்தான் எங்கள் குழந்தையை மீண்டும் எங்களிடம் சேர்க்க வேண்டும்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன உளைச்சல்

"விசாரணை நிலை தெரியாமல் தவிக்கிறோம்"

தொடர்ந்து பேசிய பவானி, "சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வீட்டைச் சுற்றி ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் என் மகள் இல்லாததால் வீடே வெறுமையாக உள்ளது".

"நாங்கள் வேலைக்குச் செல்லும்போது வீட்டில் அவள் தனியாக இருந்ததை யாராவது கவனித்து அழைத்துச் சென்றார்களா எனத் தெரியவில்லை".

"எங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் போலீசாரிடம் சொல்லிவிட்டோம்; ஆனால் விசாரணை எந்த நிலையில் உள்ளது, ஏதேனும் துப்பு கிடைத்துள்ளதா என்பது தெரியாமல் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனும் மன உளைச்சலுடனும் காத்திருக்கிறோம்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT