பீகார் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம்: வாக்குப் பதிவு சமயத்திலும் ₹10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தேர்தல் ஆணையம் இதை மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்ததாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கும் அப்பால் 200 தொகுதிகளுக்கும் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் பாஜக 91 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 79 இடங்களிலும் முன்னிலை வகித்தது. மறுபுறம், மகாகத்பந்தன் (Mahagathbandhan) கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 27 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகித்தது.
ஏமாற்றம்
தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் ஏமாற்றம்
தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்த அசோக் கெலாட், தேர்தல் பிரச்சாரத்தின்போது கூடப் பணம் பரிமாற்றம் தொடர்ந்ததாகக் கூறினார். "தேர்தல் பிரச்சாரம் நடந்த போதும் பெண்களுக்கு ₹10,000 தொடர்ந்து வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி நடப்பது வழக்கமல்ல." என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், "வாக்குத் திருட்டு" குறித்து குற்றம் சாட்டி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்த அசோக் கெலாட், "பீகாரில் தேர்தல் ஆணையம் ஒரு மௌன சாட்சியாக இருந்தது. இதை ஏன் தடுக்கவில்லை? அது சிறிதும் தலையிடவில்லை. நேர்மையான தேர்தலை உறுதி செய்யாதபோது, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல் அல்லது நேர்மையற்ற செயல் நடக்கும்போது, தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அது வாக்குத் திருட்டாகும்." என்று சாடினார்.