தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், கணியம்பாடி அருகிலுள்ள சோழவரம் துத்திக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில். இந்த கோயில் திருவிழா காரணமாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பகலில் கூழ்வார்க்கும் திருவிழா மற்றும் இரவில் கங்கையம்மன் சிரசு ஊர்வலம் ஆகியன நடந்தது. இதன் பின்னர், கோயிலிலுள்ள அம்மன் உடலில் சிரசினை பொருத்தி கண் திறப்பு செய்யும் விழாவும் மிக சிறப்பாக அரங்கேறியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயிலில் கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதையடுத்து, புலிவேஷம், கொக்கலிக்கட்டை போன்ற ஆட்டத்தினை அங்கு கூடிய பக்தர்கள் ஆடினர். இந்த திருவிழாவை முன்னிட்டு இரவில் நாடகமும் நடந்தது.
பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்
மேலும், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கங்கையம்மன் கோயிலிலும் மேற்கூறியவாறு சிரசு திருவிழா மிக விமர்சையாக நடத்தப்பட்டுள்ளது. கடந்த 28ம்தேதி கூழ் வார்த்தல் நிகழ்வும், 29ம்தேதி பொங்கல் வைத்து பூஜைகளும் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று(மே.,30) காலை 6 மணிக்கு கங்கையம்மன் சிரசு ஊர்வலமானது நடந்தது. அம்மனின் சிரசு தாரை தப்பட்டை முழங்க வீதியெங்கும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் பொழுது பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர். அம்மனுக்கு பூக்கள், காசு மாலை உள்ளிட்டவை சாற்றி வேண்டுதல் வைத்தனர். இதன்பின்னர் கோயிலுக்குள்சென்ற அம்மன் சிரசு ஊஞ்சலில் வைத்து தாலாட்டு செய்யப்பட்டது. கோயிலினை மூன்றுமுறை வலம் வந்த அம்மனின் சிரசு பொருத்தப்பட்டது. அங்குக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.