இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2
இந்தியாவில் முதலில் சிறிய அளவில் கையாலேயே ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்த வாடிலாலில், இயந்திரங்களைக் கொண்டு ஐஸ்கிரீம்களைத் தயாரிக்க புதிய இயந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார் வாடிலாலின் பேரன். மேலும், வாடிலாலின் பெயரை முறையான நிறுவனமாகவும் பதிவு செய்திருக்கின்றனர். 1970-கள் மற்றும் 80-களில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டாக விளங்கியிருக்கிறது வாடிலால். அதுவரை இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமாக விளங்கி வந்த வாடிலாலுக்கு முக்கியப் போட்டியாக வந்திறங்கியது, அமுல். 1996-ல் அமுலிடம் கடுமையான போட்டியைச் சந்தித்து தன்னுடைய முன்னணி ஐஸ்கிரீம் இடத்தை இழந்தது வாடிலால். ஆனால், அமுலுடன் போட்டியிட தனது சந்தையை பெரிதாக்க முடிவு செய்து, இந்தியா முழுவதும் தனது கிளைகளைப் பரப்ப திட்டமிட்டது வாடிலால்.
வாடிலாலின் இன்றைய நிலை:
கிட்டத்தட்ட 100 வருடங்கள் கழித்து இன்று, இந்தியாவின் டாப் 10 ஐஸ்கிரீம் நிறுவனங்களின் பட்டியலில் அமுல், குவாலிட்டி வால்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது வாடிலால். இன்று வாடிலால் காந்தி குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையின் கையில் இருக்கிறது வாடிலால் நிறுவனம். வாடிலாலின் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது எப்போதும் புதுமைகளை புகுத்திக் கொண்டே இருந்தது தான். சோடாவில் ஐஸ்கிரீமை சேர்த்து விற்பனை செய்தது அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் முதல் படி தான். அதன் பிறகு மக்களின் தேவைக்கு ஏற்றார்போலும், சந்தையின் போக்குக்கு ஏற்பவும் தொடர்ந்து புதிய ஐஸ்கிரீம் சுவைகளை அறிமுகப்படுத்துவதை வாடிலால் நிறுத்தவேயில்லை. இன்று ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாயையும், ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தையும் ஈட்டி வருகிறது வாடிலால் நிறுவனம்.