ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்
வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பல்வேறு நிதி சார்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகளை ஏற்கனவே அந்தந்த துறைகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. டிசம்பர் 31ம் தேதிக்குள் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிதி சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பு இது. டீமேட் கணக்கிற்கான நாமினி: டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்குள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்களுடைய டீமேட் கணக்கிற்கான நாமினி குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அல்லது, நாமினியை தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதையாவது குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், ஜனவரி 1ம் தேதி முதல் அவர்களுடைய டீமேட் கணக்குகளைக் கொண்டு பங்கு வர்த்தகம் செய்ய முடியாது என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 1 முதல் புதிய மாற்றங்கள்:
2023 டிசம்பர் 31ம் தேதிக்குள், திருத்தப்பட்ட வங்கி லாக்கர் விதிமுறைகள் ஒப்பந்தத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் கையொப்பமிட்டிருக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுடைய வங்கி லாக்கர்கள் பயன்படுத்த முடியாதவாறு முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டையில் திருத்தம் செய்பவர்கள் ரூ.50 செலுத்தியே திருத்தம் செய்ய முடியும். டிசம்பர் 31 வரை அப்படி திருத்தம் செய்வது இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய சிம் கார்டு வாங்குபவர்கள் பேப்பர் அடிப்படையிலான KYC (Know Your Customer) செய்ய வேண்டிய அவசியமில்லை என தொலைத்தடொர்புத்துறை முன்பே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.