LOADING...
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஒரு சாதாரண FIR வழக்கில் இருந்து அம்பலமான மிகப்பெரிய பயங்கரவாத சதி
நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாத சதித்திட்டங்களில் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஒரு சாதாரண FIR வழக்கில் இருந்து அம்பலமான மிகப்பெரிய பயங்கரவாத சதி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2025
02:46 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த பயங்கரவாத வலையமைப்பை, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாகில் ஒட்டப்பட்ட சில சுவரொட்டிகள் மூலம் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. ஒரு சிறிய வழக்கிலிருந்து தொடங்கி, நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாத சதித்திட்டங்களில் ஒன்று இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 19 அன்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக், நௌகாம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வழக்கில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, ஷோபியானை சேர்ந்த மௌல்வி இர்ஃபான் அகமது வாகா உட்படப் பலரைக் கைது செய்தது. இதுவே இந்த நடவடிக்கையின் தொடக்க புள்ளி மற்றும் முக்கியமான தெருமுனையை ஏற்படுத்திய கைதாகும்.

திருப்புமுனை

ஃபரிதாபாத் இணைப்பு

கைதானவர்களின் விசாரணையின் மூலம், அக்டோபர் 30 அன்று, ஃபரிதாபாத்தின் அல்-ஃபலா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர் முஸம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டார். இவரது கைது, இந்த வலையமைப்பை அம்பலப்படுத்தியது. இந்த வழக்கை அதிகாரிகள் "வெள்ளை காலர்" பயங்கரவாத வலைப்பின்னல் என்று குறிப்பிட்டனர். டாக்டர் முஸம்மில் ஷகீல் வாடகைக்கு எடுத்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஃபரிதாபாத் மற்றும் மேவாட்டில் இருந்து மொத்தமாக 2,563 கிலோ வெடிபொருட்கள் மற்றும் குண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நவம்பர் 6 ஆம் தேதிக்குள், இந்த வழக்கு உத்தரபிரதேசத்தை அடைந்தது, அங்கு சஹாரன்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து டாக்டர் அடீல் ராதரை போலீசார் கைது செய்தனர்.

குண்டுவெடிப்பு

செங்கோட்டை குண்டுவெடிப்பு

நவம்பர் 7 ஆம் தேதி, மருத்துவ நிபுணர்கள்(லக்னோவில் உள்ள ஒரு பெண் டாக்டர் ஷாஹீன் உட்பட) மற்றும் ஸ்லீப்பர் செல்கள் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கரவாத தொகுதியை காவல்துறை கண்டுபிடித்தது. ஃபரிதாபாத் வெடிபொருள் கைப்பற்றலுக்குப் பிறகு தலைமறைவான மற்றொரு கூட்டாளியான டாக்டர் உமர் உன் நபி, நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும், ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் குவியலில் இருந்த பொருட்களும் ஒத்துப் போவதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி காவல் துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால், ஜெய்ஷ்-இ-முகமதுடன் தொடர்புடைய ஒரு பெரிய பயங்கரவாத வலைப்பின்னல் முறியடிக்கப்பட்டுள்ளது.