ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது இந்த தகவலை தெரிவித்தார். "எனது அரசாங்கம் மேலும் ஒரு முடிவை எடுக்கப் போகிறது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலனைப் பெறுவார்கள்," என்று அவர் 18வது மக்களவையில் தனது முதல் உரையில் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விரிவாக்கமாக பார்க்கப்படுகிறது இந்த இலவச சிகிச்சை
ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) என்பது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒரு குடும்பத்திற்கு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. தற்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் கவரேஜை விரிவுபடுத்துவது, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கான மோடியின் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும். முதற்கட்டமாக அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பார்கள் என மின்ட் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகும் மருத்துவ திட்டங்கள்
வழக்கமான தடுப்பூசிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக U-WIN போர்ட்டலை இந்தியா முழுவதும் வெளியிடவும் சுகாதாரத்துறை அமைச்சகம் யோசித்து வருகிறது. மேலும், ட்ரோன் சேவைகளைப் பயன்படுத்தி, கடினமான நிலப்பரப்புகளில் AIIMS மற்றும் பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலிருந்து மருத்துவத் தேவைகளை வழங்குதல் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணமில்லா சிகிச்சை சேவைகளை வழங்குதல் ஆகிய எதிர்கால திட்டங்களும் NDA ஆட்சியில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பாதி நிறைவேறவுள்ளது.