வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம்
வேலூர் பெரிய அல்லாபுரத்தில் உள்ள ஜெயம் முடி திருத்தும் கடையில் சிறப்பு தேவை கொண்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 75 சதவீதத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக முடி திருத்தும் பணியினை ராஜா என்பவர் செய்து வருகிறார். ராஜாவின் தந்தை ராமலிங்கம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூரில் முடித்திருத்தும் பணி செய்து வருகிறார். ராஜா தனது ப்ளஸ் 2 படிப்பினை முடித்த பின்னர் சென்னையில் பிரபல முடித்திருத்தும் கடையான நுங்கம்பாக்கம் ரமேஷ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சினிமா நடிகர்களுக்கு முடிவெட்ட வேண்டும் என்பதே அவரின் மிக பெரிய கனவாக இருந்துள்ளது. அது நிறைவேறாத பட்சத்தில், தொண்டு இல்லங்களுக்கு சென்று பராமரிக்கப்படும் பார்வையற்ற மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்து வந்துள்ளார்.
இலவசமாக முடித்திருத்தம் செய்யும் பணி என்றும் தொடரும் என உறுதியளிக்கும் ராஜா
இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு வேலூர் திரும்பியதும் தந்தைக்கு உதவியாக முடி திருத்தம் செய்துவந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் முடித்திருத்தம் செய்து வந்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து தொழிலை கற்றுக்கொள்ளாமல் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் மூலம் கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். மேலும் இவர் இது போன்றவர்களை தேடி சென்று முடித்திருத்தம் செய்வதும் வழக்கம் என்று கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக முடித்திருத்தம் செய்யும் கடையை திறந்த இவர், முழு மனதோடு இலவசமாக முடித்திருத்தம் செய்வதை கண்டு பலர் இவரை பாராட்டி வருகிறார்கள். தனது இப்பணியானது எப்பவும் தொடரும் என உறுதியளிப்பது குறிப்பிடத்தக்கது.