இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்
உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கட்டண சேவை முறையாகத் திகழ்ந்து வருகிறது இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் கட்டண சேவை. உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 40% இந்தியாவிலேயே மேற்கொள்ளப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், யுபிஐ சேவையை பிரான்ஸ் நாட்டிலும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இனி பிரான்சில் வசிக்கும் இந்தியர்களோ அல்லது பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களோ, யுபிஐ சேவையின் மூலம் இந்திய ரூபாயைக் கொண்டே அங்கு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், யுபிஐ சேவையை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முதல் ஐரோப்பிய நாடாகியுள்ளது பிரான்ஸ்.
எப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது?
பிரான்சின் தலைநகரான பாரிசில் 'லா செய்ன் ம்யூச்சிக்கேல்' என்ற பண்பாட்டு மையத்தில் அங்கிருக்கும் இந்திய சமூகத்தினடரிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. அந்த மேடையில் பிரான்சில் யுபிஐ சேவைப் பயன்பாடு குறித்த தகவலை தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. பிரான்சில் யுபிஐ சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம், இன்னும் பல நாடுகளிலும் யுபிஐ சேவையை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைக் கொண்டே பிரான்சுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்தனர். அந்தப் பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட அளவு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. பிரான்சில் யுபிஐ சேவையைப் பயன்படுத்த சேவைக் கட்டணம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.