சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி
சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில், இன்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால், காலையில் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளைக்கை எரியவிட்டபடி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையிலிருந்து புறப்பட்ட புறநகர் ரயில்களும், குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அரக்கோணம் - சென்னை மார்கமாக செல்லும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக சென்றது. நாளை முதல் மார்கழி மாதம் பிறக்கவிருக்கும் நிலையில், இன்றிலிருந்தே பனி மூட்டம் ஆரம்பித்துவிட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளான,வளசரவாக்கம், போரூர்,ராமாபுரம் மற்றும் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் பனிமூட்டம் நிறைந்து இருந்தது.
சென்னையில் நீடிக்கும் கடுமையான பனி மூட்டம்
இதற்கிடையில், வங்ககடலில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை குறித்து, IMD தெரிவித்துள்ள அறிக்கையில், " ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு-பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலின் அருகிலுள்ள பகுதிகளில் உருவாகியுள்ளது" என குறிப்பிடபட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி நகரும் போது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது. இந்த அதிகாலை பனி மூட்டம் இதன் காரணமாக இருக்கக்கூடுமோ என மக்கள் யோசிப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.