100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவிலேயே முதன்முறையாக 1923ம் ஆண்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தினை கொண்டாட வழிவகுத்தார். அதன் படி, தற்போது மே தினம் கொண்டாட துவங்கி 100 ஆண்டுகள் நிறைவுப்பெறுகிறது. 1886ம் ஆண்டு மே மாதம் சிகாகோவில் சர்வதேச தொழிலாளர் தினமாக துவங்கப்பட்ட இது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. சிங்காரவேலு செட்டியார் துவங்கிய ஹிந்துஸ்தானின் தொழிலாளர் கிசான் கட்சி ஏற்பாடு செய்த தொழிலாளர் வர்க்கத்தின் சின்னமான செங்கோடி இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டது. சிங்காரவேலு செட்டியார் சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் 'மே தினம்' கொண்டாட்டங்களை நடத்தினார். பின்னர் அவர் தலைமை வகித்து விழாவில் இந்த தினத்திற்கு விடுமுறை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல செயல் திட்டங்கள் உழைப்பாளர்களுக்காக சேர்க்கப்பட்ட தினம்
1925ம்ஆண்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட நிலையில் 2ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஹிந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி துவங்கப்பட்டது. மேலும் இந்த கட்சியின் செயல் திட்டத்தில் ஆண்களுக்கு 8மணி நேர வேலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 6 மணிநேர வேலை, இலவச மருத்துவப்பரிசோதனை, வீட்டின் மேம்பாடுப்பணிகள் மேற்கொள்ளல், 4 மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 16வயது வரை கட்டாய கல்வி போன்ற பல திட்டங்கள் சேர்க்கப்பட்டது. அன்றையத்தினமே திருவான்மியூரில் நடந்த 2வது கூட்டத்தில் தொழிலாளர் கிசான் கட்சியின் செயலாளராக தேர்வுச்செய்யப்பட்டிருந்த எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் உரையாடலுடன் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.