நாட்டிலேயே முதல் முறை: வாக்காளர் பட்டியலில் தவறான விவரம் அளித்த குடும்பத்தின் மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) படிவங்களில் தவறான விவரங்களை அளித்ததாக ஒரு குடும்பத்தின் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம்பூர் மாவட்டத்தில் தேர்தல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ராம்பூரைச் சேர்ந்த நூர்ஜஹான் மற்றும் அவரது மகன்கள் அமீர் கான், டேனிஷ் கான் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூர்ஜகானின் மகன்கள் பல ஆண்டுகளாகத் துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர். ஆனால், அவர்களது தாயார் நூர்ஜஹான், வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் படிவங்களில் (SIR) தனது மகன்கள் குறித்த தவறான தகவல்களை வேண்டுமென்றே அளித்ததுடன், போலியான கையொப்பங்களையும் இட்டது கண்டறியப்பட்டது.
எச்சரிக்கை
தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை
படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்போது இந்த முரண்பாடுகள் பிஎல்ஓக்களால் (BLOs) கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிஎன்எஸ் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் மேற்பார்வையாளரின் புகாரின் பேரில் ராம்பூரில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர திருத்தம் மிகவும் தீவிரமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட்டு வருவதாக ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அஜய் குமார் திவேதி தெரிவித்தார். தவறான தகவல்களை அளிப்பது அல்லது உண்மைகளை மறைப்பது தேர்தல் விதிகளின் கடுமையான மீறல் என்று அவர் எச்சரித்தார். வாக்காளர் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இந்த எஃப்ஐஆர் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.