தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அம்மாநில அரசு அண்மையில் கட்டியுள்ளது. இந்த கட்டிடம் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ்'ன் பிறந்த நாளான வரும் 17ம்தேதியன்று அவரது கையால் திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கட்டிட பணிகள் முழுவதும் முடிந்த நிலையில், சில மர வேலைப்பாடுகள் மட்டும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமைசெயலக வாசலில் அடர்ந்த தீ எரிந்து கொண்டிருந்துள்ளது. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் பல பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சிலமணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தலைமை செயலக கட்டிடத்தை திறந்து வைப்பதை ஒத்திவைக்க வேண்டும்-எம்.பி.பண்டி சஞ்சய் குமார்
இதனைதொடர்ந்து எந்த தளத்தில் தீப்பிடித்து எரியத்துவங்கியது, தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை. முன்னதாக தீவிபத்து குறித்து செய்திகள் சேகரிக்க அங்குசென்ற செய்தியாளர்களிடம், 'இது ஒரு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை' என்று தலைமைசெயலக பாதுகாப்பு பணியாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் பின்னரே, அது தீவிபத்து என்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.க., மாநில தலைவரும், எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் இதுகுறித்து கூறுகையில், புதிய தலைமைசெயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. தனது பிறந்தநாளன்று இந்த கட்டிடத்தை திறக்கவேண்டும் என்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் எடுத்த அவசர நடவடிக்கைகளே இதற்கு காரணம். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளன்று திறக்கப்படவேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.