கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம்
தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம் பாளையம் அருகேயுள்ள பச்சபாலி ஆண்டிக்காடு தோட்டம் அமைந்துள்ளது. அங்கு முத்துசுவாமி(45) என்பவர் கோழி பண்ணை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இந்த கோழி பண்ணையினை அவர் தகர செட்டு அமைத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அத்தகைய தகர செட்டில் ஆயிரக்கணக்கான கோழி குஞ்சுகளை வளர்த்து வந்த முத்துசுவாமி, இன்று(ஜூலை.,30) வழக்கம்போல் கோழிகளுக்கு உணவு வைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்ட நிலையில், தகர செட் முழுவதும் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. பண்ணையின் மேற்கூரை முழுவதுமே தகரத்தால் அமைக்கப்பட்டிருந்ததால் தீ பரவத்துவங்கிய சில மணி நேரத்திலேயே பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது.
பண்ணை உரிமையாளர் வேதனை
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயினை அணைத்தனர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அதற்குள் பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து பண்ணை உரிமையாளர் முத்துசாமி கூறுகையில், கிட்டத்தட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள பண்ணைக்கான செட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.