புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்
1947ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சட்டரீதியான பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது சுதந்திரத்தினை எவ்வித நடைமுறையில் பெறுவது என்னும் கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. தமிழகத்தில் மன்னர் ஆட்சிக்காலத்தில் மாற்றம் ஏற்படும் நிலையில், ராஜகுரு பதவியில் இருப்பவர் செங்கோலினை புதிய மன்னருக்கு வழங்குவார். அந்த நடைமுறையினையே நாமும் பின்பற்றலாம் என்று ராஜாஜி கூறியுள்ளார், இதற்கு நேருவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி சைவச்சின்னம் பொறிக்கப்பட்ட தங்க செங்கோலினை அப்போதைய உம்மிடி பங்காரு நகை கடையில் வாங்கிக்கொண்டு ஆதீன அடியார்கள் டெல்லி சென்றுள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திரம் கிடைத்தபோது மவுண்ட் பேட்டனிடம் இருந்து இந்த செங்கோலினை திருவாவுடுத்துறை ஆதின கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.
புனித நீர் தெளிக்கப்பட்டு நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல்
இதனை தொடர்ந்து அந்த செங்கோல் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, ஆதீன ஓதுவார் திருப்பதிகம் பாடி முடித்த பின்னர், நேருவிடம் வழங்கியுள்ளார்கள். அந்த செங்கோலானது அலகாபாத் நகரில் உள்ள நேருவின் இல்லத்தில் நினைவு பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 28ம் தேதி புதிய பாராளுமன்றத்தினை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதையடுத்து, அந்த கட்டிடத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து அவர், வரலாற்றில் இந்த செங்கோலுக்கு பெருமளவில் பங்கு உள்ளது. இதற்கு பின்னால் ஓர் பெரிய பாரம்பரியமும் புதைந்துள்ளது. இதன் சிறப்பினை எடுத்துரைக்கும் வகையில் புதிய பாராளுமன்றத்தில் இந்த செங்கோல் வைக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்