
நாகை - இலங்கை கப்பல் சேவையில் கட்டண குறைப்பு; புதிய கப்பல் சேவை ஜூனில் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
நாகை துறைமுகம் தொடங்கி இலங்கை - காங்கேசன் துறைமுகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவையின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாத முதல் வாரத்தில் 250 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய கப்பல் சேவையும் துவங்க உள்ளது என சுபம் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் தெரிவித்தார்.
தற்போது, வாரம் 6 நாட்கள் (செவ்வாய்க்கிழமை தவிர) இயக்கப்படும் இந்த கப்பல் சேவையின் டிக்கெட் விலை கோடை விடுமுறையையொட்டி ரூ.8,500-இலிருந்து ரூ.8,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்கனவே 10 கிலோ லக்கேஜ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 22 கிலோ வரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
மேலும் ஒரு கப்பல் சேவை அறிமுகம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10% தள்ளுபடி, அவர்களுடன் செல்லும் ஒரு ஆசிரியருக்கு இலவச டிக்கெட் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொடர்ந்து பேசும் இயக்குநர் சுந்தரராஜன், "ஜூன் முதல் வாரத்தில் 3 மணி நேரத்தில் இலங்கையை சென்றடையும், 250 பயணிகள் பயணிக்கும் வேகக்கப்பல் சேவையும், ஜூலை முதல் வாரத்தில் சரக்கு கையாளும் கப்பல் சேவையும் துவங்குகிறது. ₹15,000 முதல் சிறப்பு சுற்றுலா திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன," என்றார்.
பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கோடைகால விடுமுறையை கழிக்குமாறு அவர் மேலும் கூறினார்.