சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டராக செல்வராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மின்வாரியத்துறையில் பல்வேறு பணியிடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ஓர் வழக்கு குறித்து செல்வராணி விசாரணை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு கடந்த 18ம்தேதியன்று ஓர் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் சுபாஷ் என்பவர் பேசியுள்ளார், அவர் தன்னை ஓர் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியதாக தெரிகிறது. இன்ஸ்பெக்டர் செல்வராணியிடம் தொடர்ந்து பேசியஅவர், தன் மீதான விசாரணை அறிக்கை ஒருதலை பட்சமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தன்மீது புகாரளித்த மின்வாரிய உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சரிதா என்பவர் மீது எந்த நடவடிக்கையும் உங்கள் விசாரணை அறிக்கையில் இல்லை என்று கூறியுள்ளார்.
சிந்தாந்திரிப்பேட்டை காவல் நிலையத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது புகார்
அதோடு, உதவி பொறியாளர் சரிதா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது தொடர்பான தகவல்களை நான் பத்திரிக்கை செய்திகளில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பு குறித்து இன்ஸ்பெக்டர் செல்வராணி அந்த தொலைபேசி எண்ணுடன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை அதிகாரியான தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை பெற்ற சிந்தாந்திரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். அதில், அவர் ஓர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்றும், அரசுப்பணிகளில் உள்ள உயரதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்று கூறி, பணிமாறுதல் வாங்கித்தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவரை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.