காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு துவக்க பள்ளிகளில் 'காலை உணவு திட்டம்' என்பதனை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த காலை உணவு திட்டத்தினை தமிழகம் முழுவதுமுள்ள துவக்கப்பள்ளிகளில் செயல்படுத்த முடிவு செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து 31,008 அரசு துவக்கப்பள்ளிகளிலும் இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
15.75 லட்ச அரசு துவக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயனடைவர்
நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தமிழ்நாட்டின் சிறப்பான திட்டங்களுள் ஒன்றான இந்த காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தமிழக முதல்வர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் துவங்கி வைக்கவுள்ளார் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அனைத்து கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இத்திட்டத்தினை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் அமைந்துள்ள ஏதேனும் ஓர் துவக்கப்பள்ளியில் துவங்கிவைக்குமாறு முதல்வர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 15.75 லட்ச அரசு துவக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.