கைதுக்கான காரணங்களை 'எழுத்துப்பூர்வமாக' வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால், அந்த கைது சட்டவிரோதமாகும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த விதி, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) அல்லது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) உட்பட, நாட்டில் உள்ள அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும். கைதுக்கான காரணங்களைத் தெரிந்துகொள்வது என்பது அரசியலமைப்புச் சட்டம் 22(1)-ன் கீழ் உள்ள அடிப்படை உரிமை ஆகும். இது வெறும் நடைமுறை சடங்கு அல்ல என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
விவரங்கள்
எழுத்து பூர்வமான தகவல் எப்படி வழங்கப்பட வேண்டும்?
கைது செய்யப்பட்ட நபருக்கு புரியும் மொழியில் இந்த காரணங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும். எனினும், அவசர காலங்களில் கைது செய்யும் அதிகாரி வாய்மொழியாகத் தெரிவிக்கலாம். ஆனால், கைது செய்யப்பட்டவரை நீதிபதியிடம் (Remand) ஆஜர்படுத்துவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், இந்தக் காரணங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும். எழுத்துப்பூர்வ காரணங்களை உரிய காலக்கெடுவிற்குள் வழங்கத் தவறினால், அந்த கைது மற்றும் அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற காவலுக்கான உத்தரவு (Remand) செல்லாது (Illegal) என்று அறிவிக்கப்படும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த இந்தத் தீர்ப்பு, காவல் துறையின் அதிகாரத்தைத் தணிக்கவும், தனிநபரின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.