LOADING...
திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் கொடுத்த கடிதம்
திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி

திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் கொடுத்த கடிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
04:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்பாக எ.வ.வேலு நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து எ.வ.வேலு தரப்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

மருத்துவமனை

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை

அந்தக் கடிதத்தில், எ.வ.வேலுவுக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவரால் இன்றைய விசாரணையில் நேரில் பங்கெடுக்க இயலவில்லை என்றும், சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியவுடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நேரில் ஆஜராவார் என்றும் அவரது வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பின்னணி

லஞ்ச ஒழிப்பு சோதனையும் ஆவணங்கள் பறிமுதலும்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்க அவர் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். தற்போது EV வேலு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் இந்த ஊழல் வழக்கின் தீவிரத் தன்மையைக் குறைக்கவும், தற்காலிகமாகக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் என்ற அரசியல் ரீதியான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

Advertisement