ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வரும் பிப்ரவரி 27ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவு தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று(ஜன 23) சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வாழ்த்தினை பெற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியஅவர், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்ததாகவும், பிரசாரத்திற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். தொடர்ந்து முதல்வர் பிரசாரத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும், ஏற்கனவே தொகுதியில் திமுக காங்கிரஸ் கட்சியினர் இணைந்து பிரசாரத்தை துவங்கிவிட்டதாக கூறியஅவர், முதல்வர் தங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்றும், தங்கள் வெற்றி நிச்சயம் என்றும் நம்பிக்கையாக பேசியது குறிப்பிடத்தக்கது.
ம.நீ.ம. தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரிய இளங்கோவன்
தமிழக முதல்வரை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் கட்சி அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கட்சி செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார் என்று கூறினார். மேலும், அவர் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தேர்தலுக்கான கூட்டணியாக இது அமையும் என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமை போன்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் என்பது குறிப்பிடவேண்டியவை.