ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த வேட்புமனு தாக்கலில், முதல் நாளான நேற்று 4 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். தேர்தல் தேதி நெருங்குவதை தொடர்ந்து அரசியல் கட்சியினரின் கள பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ம.நீ.ம., எஸ்டிபிஐ கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே போல் தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக கட்சி சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிடுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு
இந்நிலையில் அதிமுக கட்சி இரு அணிகளாக பிரிந்துள்ளதையடுத்து வேட்பாளர் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிடப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ., தென்னரசுவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகப்படுத்தினார். வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு கடந்த 2001 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர். மேலும் இவர் ஈரோடு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.