ஈரோடு இடைத்தேர்தல் - அனுமதியில்லாமல் திறந்த 14 அதிமுக, திமுக அலுவலகங்களுக்கு சீல்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
இதில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக கட்சி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.
மற்ற கட்சியினரும் தங்கள் வேட்பாளர் குறித்த தகவல்களை அளித்தனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் அப்பகுதியில் அனைத்து கட்சியினரும் பிரச்சாரம் என தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, 50ஆயிரத்திக்குமேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
அப்படியில்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும்.
ரூ.10ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை உரியஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்றாலும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகம் திறப்பு, வாகனங்கள், பொதுக்கூட்டங்களுக்கு முன்அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அதிரடி நடவடிக்கை
அனுமதியின்றி அலுவலகங்கள் திறப்பு - ஆய்வு செய்ய தேர்தல் அலுவலர் உத்தரவு
இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக'வினரும் திமுக'வினரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
திமுக'வினர் 100 இடங்களில் அனுமதியின்றி அலுவலகம் திறந்து வைத்துள்ளதாக அதிமுக'வினர் கூறினர்.
இதே குற்றச்சாட்டை திமுக, அதிமுக மேல் கூறியது. இதனையடுத்து இதுகுறித்து ஆய்வு செய்ய தேர்தல் அலுவலர் சிவகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது திமுக'வினர் 10 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் அனுமதியின்றி அலுவலகம் திறந்துவைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த அலுவலகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்று இன்று(பிப்.,16) சீல் வைத்து நடவடிக்கையினை மேற்கொண்டனர்.