ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பிரச்சனையை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்த ஒபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இதன் தீர்ப்பு ஒபிஎஸ் தரப்பினருக்கு சாதகமாக வரவில்லை. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். இதை எதிர்த்த ஈபிஎஸ் தரப்பினர், கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு, இந்த வாரத்தோடு இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை நாளைக்கு(ஜன:5) தள்ளி வைத்துள்ளனர்.
விசாரணையில் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி பதில்கள்:
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதா? ஈபிஎஸ் தரப்பு: பொதுகுழு உறுப்பினர்களால் பெரும்பான்மையில் ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒபிஎஸ் தரப்பின் வாதம்: அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொது செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதனால் இது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றதா? ஓபிஎஸ் தரப்பு: வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் ஒருமித்த கருத்துடன் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். விளக்கம் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்? ஈபிஎஸ் தரப்பு: அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதால் நீக்கப்பட்டார். நீதிபதிகள் பதில்: அவர் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது நீதிமன்றத்திற்கு அவசியம் இல்லாதது. இந்த வாரத்திற்குள் இந்த வழக்கை நிறைவு செய்ய விரும்புகிறோம். என்று கூறி வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.