 
                                                                                அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
செய்தி முன்னோட்டம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஈபிஎஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக, ஈபிஎஸ்ஸிற்குப் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும், அவர் கட்சியை விட்டு நீக்கிய நிர்வாகிகளை மீண்டும் இணைக்கக் கோரி ஈபிஎஸ்ஸிற்குக் கெடு விதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே கடந்த செப்டம்பர் மாதம் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
தேவர் ஜெயந்தி
தேவர் ஜெயந்தியில் ஓபிஎஸ், டிடிவியுடன் கைகோர்ப்பு
இந்தச் சூழலில், வியாழக்கிழமை பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் பயணம் செய்ததுடன், மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அத்துடன், செங்கோட்டையன் சசிகலாவையும் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் துரோகிகள் என்றும், அவர்கள் பேசி வைத்துக்கொண்டு ஒன்றாகச் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போது அடுத்த அதிரடியாக கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு pic.twitter.com/dAA4SO2WrC
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) October 31, 2025