LOADING...
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி
சட்டப்பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்

எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2026
01:26 pm

செய்தி முன்னோட்டம்

தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற பின், சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தேர்தல் வாக்குறுதி ஏமாற்றங்கள் மற்றும் தனது மகன் மிதுனின் அரசியல் வருகை குறித்து அதிரடியான பல விமர்சனங்களையும் விளக்கங்களையும் முன்வைத்தார்.

சாடல்

"38 நாட்களில் 130 கொலைகள்": தவெக அரசை சாடிய இபிஎஸ்

தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தவெக அரசு பேசிய வீர வசனங்கள் அனைத்தும் தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். "போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலும் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தவெக அரசு பதவியேற்ற கடந்த 38 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 150 போக்சோ பாலியல் வழக்குகளும், 130 கொலைகளும் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று சொன்ன அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இவர்கள் அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப் படைக்கே தனியாக ஒரு பாதுகாப்பு தேவைப்படும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் உள்ளது" என சாடினார்.

வாரிசு அரசியல்

"மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்"

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அதிமுகவில் முக்கியப் பொறுப்புக்கு வரவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வரப்போகிறார் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அவர் அதிமுகவில் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார்" என்றார்.

Advertisement

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்த கேள்விக்கு பதில்

அதிமுக தலைமை சரியில்லை என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, "எங்கள் தலைமை சரியாக இருந்ததால்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்ற கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி சுருக்கமாகப் பதிலளித்தார்.

Advertisement