
திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு-உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குட்டிகளுடன் கூடிய யானைக்கூட்டம் நீர், உணவினை தேடி மலையடிவார கிரமப்பகுதிகளுக்குள் சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
திருமூர்த்திமலை, கன்னிமார் ஓடை வனப்பகுதி வழியாக திருமூர்த்தி நகருக்குள் நேற்று(ஏப்ரல்.,12) அதிகாலை நுழைந்துள்ளது.
இந்த யானைக்கூட்டம் வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 250மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி, 50க்கும் மேற்பட்ட வேலி கற்களை உடைத்துக்கொண்டு சென்று தென்னை மரங்களின் குருத்துக்களை உண்டு சேதப்படுத்தியுள்ளது.
மேலும் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்கள், குழாய்கள், போர் வெல்கள் போன்ற நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
யானைகள்
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வருத்தம்
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு அந்த யானைக்கூட்டத்தினை வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அப்பகுதி விவசாயிகள் பேசுகையில், பெரிய தந்தங்கள் கொண்ட ஆண் யானை, பிறந்து சில மாதங்களே ஆன குட்டியுடன் கூடிய பெண் யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
குட்டியுடன் உள்ளதால் அது பெரிதாகும் வரை இங்கிருந்து அதனை விரட்டுவது கடினம்.
வெகு நாட்களுக்கு பிறகு திருமூர்த்திமலை கோயில், நீச்சல் குளம், ஆய்வு மாளிகை பகுதிகளில் யானை கூட்டம் காணப்படுகிறது.
இவற்றால் விவசாய பயிர்கள், கட்டமைப்புகள் சேதமடைவதோடு, உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.