வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு! 17 மாநிலங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட புதிய மற்றும் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதற்காக 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை (SSR) அறிவித்து வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சிறப்பு தீவிர திருத்த முறையின் (SIR) போது பெயர்கள் விடுபட்டவர்கள் மற்றும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். வரும் ஜனவரி 1, 2027 தகுதி நாளாகக் கொண்டு இச்சேர்க்கை நடைபெறவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12 அன்றும், இறுதிப் பட்டியல் ஜனவரி 4, 2027 அன்றும் வெளியிடப்படும்.
மாநிலங்கள்
சேர்க்கை முகாம் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தேர்தல் அட்டவணை
இந்த சிறப்பு சேர்க்கை முகாம் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட், சத்தீஸ்கர், கோவா, அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகியவற்றில் நடத்தப்படுகிறது.
இதில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2027 பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், சிறப்பு திருத்தப் பணி நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் பிற மாநிலங்களுக்கான சிறப்பு சேர்க்கை முகாம் அட்டவணை பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
சர்ச்சை
சிறப்பு தீவிர திருத்த சர்ச்சையும் எதிர்க்கட்சிகளின் போராட்டமும்
கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்த முறையின் (SIR) போது கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி மற்றும் இளைஞர் அமைப்புகள் குற்றம் சாட்டி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
குறிப்பாக படிவம் 6 உடன் சேர்த்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பெற்றோர் பெயர்கள் இருப்பதை உறுதி செய்யும் கூடுதல் அறிவிப்புப் பத்திரத்தை (Declaration Form) தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியதே இந்த சர்ச்சைக்கு முதன்மை காரணமானது.
இதற்கிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக்கோரி நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஆணையம் விளக்கம்
வழக்கமான படிவம் 6 பயன்பாடு குறித்து ஆணையம் விளக்கம்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கு வழக்கமான படிவம் 6 (Form 6) போதுமானது என்றும், இதில் சர்ச்சைக்குரிய கூடுதல் அறிவிப்புப் பத்திரம் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
1960-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு விதிகளின்படி வழக்கமான காலங்களில் பயன்படுத்தப்படும் எளிய படிவங்களே செல்லுபடியாகும்.
உச்சநீதிமன்றத்தில் இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், தகுதியுள்ள எந்தவொரு இளம் வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.