LOADING...
ஏப்ரல் 9 முதல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

ஏப்ரல் 9 முதல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2026
08:17 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத் திருவிழாவின் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முழுமையான தடை விதித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள்

இந்த காலக்கட்டத்தில் நாளிதழ்கள், வார இதழ்கள் போன்ற அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி சேனல்கள், வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பகிரக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது. வாக்காளர்கள் எவ்விதத் தூண்டுதலும் இன்றித் தங்களின் வாக்குகளை செலுத்த ஏதுவான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். தேர்தல் நேரங்களில் வெளியாகும் இத்தகைய கணிப்புகள் வாக்காளர்களின் முடிவுகளில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்து வந்தன. ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் சாதகமாக சித்திரிக்கப்படும் தரவுகள், நடுநிலையான வாக்காளர்களைக் குழப்பமடையச் செய்யும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

Advertisement