அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான சமீபத்திய பிரசாரத்தின் போது, அருந்ததியர் சமூகம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் கருத்துக்கு அருந்ததியர் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு மேனகாவிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது, தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடக்கிறது.
சீமான் மீது வழக்கு பதிவு
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என்பவர் போட்டி இடுகிறார். இந்நிலையில், ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான் பேசிய கருத்துக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, புதிய ஆட்சியாளர்களுக்கு வேலை செய்ய துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் சமூகத்தினர் மறுத்துவிட்டனர். "அப்போதுதான் ஆந்திராவில் இருந்த அருந்ததியர் சமூகத்தை இந்தப் பகுதியின் துப்புரவுத் தொழிலுக்கு அழைத்து வந்தார்கள்." என்று சில நாட்களுக்கு முன்பு தனது பிரச்சார உரையில் சீமான் கூறினார். அவர் இதை கூறியதில் இருந்து பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சீமான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.